உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - இராணுவத்துடன் தொடர்புபடுத்த சர்வதேச சூழ்ச்சி : அம்பலமாகும் தகவல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை இராணுவத்துடன் தொடர்புபடுத்தும் சர்வதேச சூழ்ச்சி இடம்பெறுகின்றது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “காவல்துறை சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலந்த ஜயவர்தனவுக்காக அல்ல, உண்மை மற்றும் நீதிக்காகவே நான் குரல் கொடுக்கின்றேன்.
தாக்குதல் சம்பவம்
இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அனைத்து தகவல்களையும் முன்கூட்டியே புலனாய்வாளர்கள் கண்டுபிடித்து வழங்கி இருந்தனர்.
இப்படியான புலனாய்வாளர்கள் தண்டிக்கப்பட்டால் , இதன் பிறகு ஆயிரம் குண்டுகள் வெடித்தாலும் தகவல்களை வெளியிட புலனாய்வாளர்கள் முன்வரமாட்டார்கள்.
எமது இராணுவத்தினரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, நீதி மற்றும் உண்மைக்கான முன்னிலையாகும் பொறுப்பு என்பன எம் முன் உள்ளன. அதற்காக நாம் முன்னிலையாவோம்.
புலிகள் அமைப்பு
இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன்னர் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மாயையை உருவாக்கி, இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என புலிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நியாயப்படுத்தும் உள்நோக்கத்தின் அடிப்படையிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை இராணுவம்மீது சுமத்துவற்கு சர்வதேச சூழ்ச்சி உள்ளது.
மேற்குலக நாடுகள் மற்றும் பிரிவினைவாத சக்திகளே இந்த சூழ்ச்சியின் பின்னால் உள்ளன. மேற்படி சக்திகளின் உள்ளக முகவர்கள் சிலர், இராணுவத்தினர்மீது குற்றம் சுமத்தி டொலர்களைப் பெறுவதற்காக காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.” என உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
