வடக்கு கிழக்கிற்கு காணி,காவல்துறை அதிகாரம் வழங்க மகிந்த தரப்பு கடும் எதிர்ப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவதற்கு சிறி லங்கா பொதுஜன பெரமுன எந்த உடன்படிக்கையையும் மேற்கொள்ளவில்லை என அதன் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், மாகாண சபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் தமது கட்சியின் நிலைப்பாட்டை விளக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவது
மாகாண சபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் தானும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவும் கருத்து தெரிவித்ததாகவும் 1987 இல் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் மாகாணசபைகளுக்கு இதுவரை ஏன் அதிகாரம் வழங்கப்படவில்லை என்பதை முதலில் கண்டறிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
ரணிலுக்கு ஆணை வழங்கப்படவில்லை
வடக்கு, கிழக்கிற்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆணை கிடைக்கவில்லை எனவும் அவ்வாறு வழங்க முயற்சித்தால் புதிய ஆணையை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சரத் வீரசேகர தெரிவித்ததாக சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.
