யாழ்ப்பாணத்தில் காவல்துறையின் செயற்பாடு : அமைச்சர் டக்ளஸ் அதிருப்தி
யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான காவல்துறையின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு திடமான தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவை பற்றிய நடவடிக்கைகள் தொடர்பாக அதிபர் செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடையே சூம் காணொளி ஊடாக இன்று(03.01.2024) நடைபெற்ற கலந்துரையாடலின் போது மேற்குறித்த விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் காவல்துறையின் செயற்பாடு
போதைப் பொருள் பாவனைக்கு எதிராக யாழ் மாவட்டத்தில் காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் அணுகுமுறைகளும் அதிருப்தியையும் சந்தேகங்களையும் ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ள அமைச்சர், சில சந்தர்ப்பங்களில் போதைப் பொருள் வியாபாரிகள் தப்பித்துக் கொள்வதற்கான காலஅவகாசத்தினை காவல்துறையினர் வழங்கியதான சந்தேகம் மக்கள் மத்தியில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய மீன்பிடி
அதேபோன்று, வற் அதிகரிப்பு உட்பட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு, இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் செயற்பாடுகள் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துவதால், அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் காத்திரமான தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார்.
கடற்றொழிலாளர் விவகாரத்தினை தீர்ப்பதற்கு இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்கள் மற்றும் துறைசார்ந்தோரை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட இணைந்த செயற்குழுவின் சந்திப்பு மற்றும் இருநாட்டு அமைச்சர் மட்டத்திலான சந்திப்பு போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டது.
அதேபோன்று, பனை தென்னை வள கூட்டுறவுச்சங்களின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கான கடன் வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தல் மற்றும் வற் அதிகரிப்பு, எரிபொருள் விலையேற்றம் போன்றவற்றால் நாடளாவிய ரீதியில் பாதிப்பை எதிர்கொண்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல் போன்ற பல்வேறு விடயங்கள் இன்றைய கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |