மன்னாரில் பொதுமக்கள் மீது காவல்துறையினர் அராஜகம் : சுகாஷ் கண்டனம்
மன்னார் காற்றாலைக்கு எதிராக போராடிய அப்பாவி பொதுமக்களையும், வணக்கத்துக்குரிய மதகுருக்களையும் காவல்துறையினர் இழுத்துச் சென்று அராஜகம் புரிந்ததை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் (K.Sugash) தெரிவித்துள்ளார்.
குறித்த போராட்டத்தில் இன்று (28) கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “மன்னார் மக்கள் காற்றாலையை நிரந்தரமாக அமைக்க வேண்டாம் என கூறி போராடுகின்றார்கள். காற்றாலையை அமைப்பதாக இருந்தால் மக்கள் நடமாட்டம் இல்லாத சன நெரிசல் இல்லாத இடங்களில் அமைக்குமாறு தான் கூறுகின்றார்கள்.
மக்களைத் தாக்கிய அரசாங்கம்
ஆனால் மக்களினுடைய உணர்வுகளை புரியாத அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் மக்களைத் தாக்கியிருக்கிறது. இவ்வாறு தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
அநுரகுமார திசாநாயக்கவிடம் (Anura Kumara Dissanayake) நாங்கள் கேட்கின்ற கேள்வி, இதே மாதிரி காவல்துறையினர் பௌத்த மதகுரு மீது தாக்குதல் நடத்துவார்களா? அவ்வாறு தாக்குதல் நடாத்திவிட்டு அவர்களால் கடமையில் இருக்க முடியுமா? உங்களுக்கு சைவ சமயத்தவர்களும் கிறிஸ்தவ சமயத்தவர்களும் இழக்காரம் ஆகிவிட்டார்களா?
மன்னார் மக்களுடைய உணர்வுகளோடு நாங்கள் சேர்ந்து நிற்கின்றோம். மக்களுடைய கோரிக்கைகள் ஈடேறுகின்ற வரைக்கும் நாங்கள் அவர்களுடன் இணைந்து இருப்போம். எங்களைப் பொறுத்தவரை இது ஒரு அராஜகம், வன்முறை. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்“ என் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
