மன்னார் நகரசபையின் புதிய தலைவருக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு
மன்னார் நகரசபையின் (Mannar Urban Council) புதிய தலைவர் டனியேல் வசந்தனுக்கு எதிராக முன்னாள் தலைவர் அன்ரனி டேவிட்சன் மன்னார் காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
புதிய தலைவரான டனியேல் வசந்தன் பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி தங்கள் நற்பெயருக்கும், அரச செயற்பாட்டுக்கும் களங்கம் விளைவித்துள்ளதாக குறிப்பிட்டு அந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ”மன்னார் நகரசபையின் புதிய தலைவர் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கடந்த காலங்களில் மன்னார் நகரசபையின் பண்டிகைகால கடைகள் ஒதுக்கீடு, 5ஜீ தொழில்நுட்ப சேவையை வழங்கும் செயற்பாட்டுக்கு அனுமதி வழங்க இலஞ்சம் பெற்றதாகவும் அவற்றில் ஊழல் இடம்பெற்றதாகவும் அது தொடர்பாக முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
முறைப்பாட்டாளர் தெரிவிப்பு
குறித்த கருத்தில் எந்தவித உண்மையும் இல்லை எனவும் பகிரங்க குத்தகை மூலம் இடம்பெற்ற விற்பனையில் எந்த ஒரு ஊழலும் இடம்பெறாத நிலையில் வேண்டும் என்றே தங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், தனிப்பட்ட உள்நோக்கம் கருதி மன்னார் நகரசபை தலைவர் ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்துள்ளதாகவும் முறைப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாகவே பல்வேறு அரச குழுக்கள் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் நடத்திய நிலையில் இதுவரை எந்த ஒரு குற்றச்சாட்டும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாத வேளை மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வரும் போது குறித்த ஊடக சந்திப்பு இடம்பெற்றுள்ளது எனவும் முன்னாள் தலைவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் மன்னார் நகரசபையின் புதிய தலைவருக்கும் தனக்கும் தலைவர் தெரிவின் போது கருத்து வேறுபாடுகள் நிலவிய நிலையில் காழ்புணர்ச்சி காரணமாக வேண்டுமென்றே தன் மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற அடிப்படையில் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

