மட்டக்களப்பு ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு : திருகோணமலையில் பேருந்தை திருப்பி அனுப்பிய காவல்துறையினர்
மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருகோணமலையில் இருந்து சென்றவர்கள் வெருகல் பாலத்தில் வைத்து தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் சங்கத்தினால் மட்டக்களப்பு – கல்லடியில் இன்று (04) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருகோணமலையில் இருந்து பேருந்து ஒன்றில் சென்றிருந்தனர்.
விசாரணை மேற்கொண்டனர்
இவர்களை வெருகல் பாலத்தில் உள்ள காவல்துறை சேதனைச்சாவடியில் வைத்து காலை 7.45 மணியளவில் வழிமறித்த காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப்படையினர் அவர்களிடம் பேருந்து டிக்கட்டுக்களை கேட்டதுடன் அவர்கள் அனைவரையும் பேருந்தில் இருந்து இறக்கி விசாரணைக்கு மேற்கொண்டதுடன், பேருந்தையும் சேதனைக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கின்றனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்திற்காக கொண்டு சென்ற பதாகைகளும் ஏனைய பொருட்களும் பேருந்தினுள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் அனைவருடைய விபரங்களையும் பெற்றதுடன் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநரின் ஆவணங்களையும் பறித்து இதை மீறிச் சென்றால் வழக்கு தாக்கல் செய்வதாகவும் காவல்துறையினர் மிரட்டியிருந்தனர்.
திருப்பி அனுப்பப்பட்ட பேருந்து
இதேவேளை புகைப்படங்களை எடுத்தவர்களுடைய கைத்தொலைபேசியை காவல்முறையினர் வாங்கி அனைத்தையும் அழித்துவிட்டு வழங்கியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நீண்ட நேர வாக்குவாதத்தின் பின்னர் குறித்த பேருந்து மீண்டும் திருகோணமலைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் உட்பட 43 பெண்களும் 10 ஆண்களும் குறித்த பேருந்தில் பயணம் மேற்கொண்டிருந்ததாக தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |