சாரதிகளே அவதானம் : காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சோதனை கருவி
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்காக 150,000 ப்ரீதலைசர்(breathalyzers) கருவிகள் நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களை பரிசோதிக்கும் நோக்கில் நேற்று (டிசம்பர் 23) நாடு தழுவிய ரீதியில் போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
அதிகரித்து செல்லும் விபத்துக்களை குறைப்பதே நோக்கம்
சமீப நாட்களாக அதிகரித்து வரும் பயணிகள் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்துகளை குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக உள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சோதனைகளை மேற்கொள்வதற்காக நாடு முழுவதும் 24 மணி நேரமும் போக்குவரத்து அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காவல்துறையின் அறிவிப்பு
இந்த விசேட நடவடிக்கையின் போது, பொதுமக்கள் கவனக்குறைவாக, அல்லது சட்டத்தை மீறும் வகையில் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களை ஓட்டினால் 119 மற்றும் 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |