கட்டளையை மீறிச் சென்ற வான் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு!
கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் கட்டளையை மீறிச் சென்ற வான் மீது நேற்றிரவு (12) காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
கம்பஹா பகுதியில் வான் மூலம் போதைப்பொருள் விநியோகிக்கப்படுவதாக மேல் மாகாண புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், வெலிவேரிய காவல் நிலைய அதிகாரிகள் நேற்று சிறப்பு நடவடிக்கை ஒன்றை செயற்படுத்தியுள்ளனர்.
குறித்த வான் வேன் உடுகம்போல நோக்கிச் செல்வதை உறுதிசெய்த காவல்துறையினர், அதை ஜீப்பில் ரகசியமாகப் பின்தொடர்ந்துள்ளனர்.
அதிகாரிகளின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து
தான் பின்தொடரப்படுவதை அறியாத ஓட்டுநர், உடுகம்போல வீதியிலுள்ள மல்வத்தை சந்திப்பில் வாகனத்தை நிறுத்திய நிலையில், அப்போது ஜீப்பிலிருந்து இறங்கிய அதிகாரிகள் வானை சோதனையிட முயன்றுள்ளனர்.

இதன்போது, ஓட்டுநர் வானை முன்னும் பின்னுமாக வேகமாக இயக்கி, அருகிலிருந்த பிற வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன், காவல் துறை ஜீப் மீதும் மோதி தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
இதனால் அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால், காவல்துறையினர் வான்ன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து ஓட்டுநர் காயமடைந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், சந்தேகநபரான காயமடைந்த ஓட்டுநர் காவல் துறை பாதுகாப்பில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து, வானில் நடத்தப்பட்ட சோதனையில் 15 கிராம் ஹெரோயின் மற்றும் 9 கிராம் ஐஸ் போதைப்பொருட்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.