உத்தரவை மீறி பயணித்த பாரவூர்தி : காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை
உத்தரவை மீறி பயணித்த பாரவூர்தி ஒன்றின் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும், தெரியவருகையில், வத்தளையில் (Wattala) இருந்து பாரவூர்தி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபர் ஒருவர், கடுவெல (Kaduwela) நகரத்தை கடந்து சென்றுள்ளார்.
வத்தளை பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு காய்கறிகளை ஏற்றி வந்த, குளிரூட்டப்பட்டபாரவூர்தியே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த பாரவூர்தியின் சாரதி தேநீர் அருந்துவதற்காக பல்பொருள் அங்காடிக்கு அருகில் உள்ள ஒரு இரவு உணவகத்தின் முன்பு தனது வாகனத்தை நிறுத்தியிருந்தபோது, சந்தேக நபர் அந்த பாரவூர்தியை திருடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வீதித் தடைகளை அமைத்து பாரவூர்தியை நிறுத்த முயற்சித்த போதிலும், சந்தேக நபர் பாரவூர்தியை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றுள்ளார்.
அதன்படி, காவல்துறையினர் பாரவூர்தி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில், சந்தேக நபர் பாரவூர்தியில் இருந்து இறங்கி தப்பிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபர் களனி பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
