யாழில் AL மாணவிக்கு போதைப்பொருள் பாவனையாளர்கள் தொந்தரவு - கண்டுகொள்ளாத காவல்துறை
வீதியில் இருந்து போதைப்பொருள் பயன்படுத்தியவர்களால் உயர்தர வகுப்பு மாணவி ஒருவருக்கு தொந்தரவு என்றும், அது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வட்டுக்கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரி கூறியும் அங்கு பணி புரியும் காவல்துறையினர் அசண்டையீனமாக செயற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது நேற்றையதினம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதி ஒருவரால் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
தகாத வார்த்தைப் பிரயோகங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், சிலர் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதி ஒன்றில் வீதியில் இருந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டனர்.

இதன்போது தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டனர். சம்பவம் நடந்த பகுதிக்கு அருகாமையில் உள்ள வீட்டில் உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் கல்வி கற்றுக் கொண்டிருந்தார்.
இது குறித்து வட்டுக்கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்திய போது காவல்துறையினரை உடனடியாக அனுப்புவதாக அவர் கூறினார்.
காவல்துறையினர் நீண்ட நேரமாக வராத காரணத்தால் மீண்டும் பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தியவேளை அவர் வெளிக்களத்தில் கடமையில் இருந்த காவல்துறை உத்தியோகத்தரின் தொலைபேசி இலக்கத்தை வழங்கினார்.
ஆட்கள் பற்றாக்குறை
நான் அந்த இலக்கத்திற்கு தொடர்புகொண்டு விடயத்தை கூறியவேளை "காவல்துறை நிலையத்தில் சென்று முறைப்பாடு பதிவு செய்யுங்கள். அதன் பின்னரே வருவோம்" என்று கூறினர்.
நான் முறைப்பாடு செய்ய இது எனது தனிப்பட்ட பிரச்சினை அல்ல. அப்படி முறைப்பாடு செய்தால் நாங்கள் தனிப்பட்ட ரீதியாக முரண்பாடுகளுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாக வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது.

அத்துடன் முறைப்பாடு செய்த பின்னர் தான் காவல்துறையினர் வருவார்கள் என்றால் குற்றச்செயல் நிறைவடைந்த பின்னரே அவர்களால் வரமுடியும். அப்படி வந்து என்ன பயன்? என்றார்.
காவல்துறை அவசர பிரிவுக்கும் அழைப்பு மேற்கொண்டு சொன்னேன். அவர்களும், குறித்த இடத்திற்கு செல்லுமாறு வெளிக்களத்தில் கடமையில் இருந்த காவல்துறையினருக்கு கூறினர்.
இருப்பினும் அவர்கள் வரவில்லை என்றார். இதற்கு பதிலளித்த வட்டுக்கோட்டை காவல்துறை நிலைய உத்தியோகத்தர் லியூறன், எமது காவல்துறை நிலையத்தில் ஆட்கள் பற்றாக்குறை காணப்படுகிறது. இவர்கள் அழைப்பு மேற்கொள்ளும்போது நாங்கள் அராலி கிழக்கில் நின்றோம். அதனால்தான் போக முடியவில்லை. இல்லாவிட்டால் போயிருப்போம் என்றார்.
முறைப்பாடு பதிவு
இது குறித்து கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர், குற்றச்சாட்டுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆட்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு நீங்கள் சொல்ல வேண்டாம்.

கடைசியாக நடந்த போதைப்பொருள் தடுப்பு கூட்டத்திலும் இதைத்தான் நாங்கள் உங்களுக்கு சொல்லி விட்டோம். சில இடங்களை அடையாளப்படுத்தி, அங்கு போதைப்பொருள் பிரச்சனைகள் தொடர்ந்து நடப்பதாக உங்களுக்கு கூறியிருந்தோம்.
அடுத்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு எதிராக தான் நடவடிக்கை எடுப்போம். அவர்கள் ஆதாரத்துடன் கூறுகின்றார்கள்.
முறைப்பாடு பதிவு செய்துவிட்டு வருமாறு நீங்கள் கூறவும் முடியாது. அப்படி முறைப்பாடு பதிவு செய்துவிட்டு வருவதற்கு மூன்றுநாள் ஆகும். அடுத்தமுறை இப்படி எமக்கு முறைப்பாடு வராத வகையில் வட்டுக்கோட்டை காவல்துறையினர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |