அரச மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தி பிரதாபனின் உடல்(படங்கள்)
புதிய இணைப்பு
சந்தேக நபரை துரத்திச் சென்ற போது காணமல்போய் சடலமாக மீட்கப்பட்ட ஜா-எல பொலிஸ் உத்தியோகத்தரான 26 வயதுடைய கிருஷ்ணமூர்த்தி பிரதாபனின் இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இன்று இடம்பெற்றது.
உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை பூரண அரச மரியாதையுடனும் காவல்திணைக்களத்தின் கௌரவ மரியாதையுடன் பேன்ட் வாத்தியம் முழங்க சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சீருடை தொப்பி, பதக்கம், வாழ்க்கை வரலாறு அடங்கிய பட்டயம் என்பன யாழ்ப்பாண பிராந்திய காவல் அத்தியட்சகரால் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
முதல் இணைப்பு
சந்தேக நபரை துரத்திச் சென்ற போது காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட ஜா - எல காவல்துறை உத்தியோகத்தரான 26 வயதுடைய கிருஷ்ணமூர்த்தி பிரதாபனின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுள்ளது.
குறித்த இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இன்று(26)இடம்பெற்றது.
உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை பூரண அரச மரியாதையுடன் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன் காவல் திணைக்களத்தினர் இறுதி மரியாதையை செலுத்தினர்.
சார்ஜன்டாக பதவி உயர்வு
இறுதிக் கிரியையின் போது மேல்மாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கலந்து கொண்டு உயிரிழந்தவருக்கு இறுதி மரியாதையை செலுத்தி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ஒரு தொகை பணத்தையும் கையளித்தார்.
உயிரை துச்சமென கருதி உயிரிழந்த காவல்துறை கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தி பிரதாபன் காவல் சார்ஜன்டாக பதவி உயர்வு பெற்றுள்ளதுடன் அவருக்குரிய கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறும் என மேல்மாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் குடும்பத்தினருக்கு வாக்குறுதியளித்தார்.
இதன்போது காவல்துறை திணைக்கள உயரதிகாரிகள், வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர், யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர், சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர்கள் உள்ளிட்ட காவல்துறை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அரச மரியாதையுடன் தகனம்
உயிரிழந்த காவல்துறை கான்ஸ்டபிளின் பூதவுடல் அரச மரியாதையுடன் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் இன்று மதியம் தகனம் செய்யப்படவுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (23) குறித்த காவல்துறை உத்தியோகத்தர் உள்ளிட்ட மேலும் சில காவல்துறை உத்தியோகத்தர்கள் ஜா-எல பகுதியில் நீரோடை மூலம் தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை துரத்திச் சென்ற போது குறித்த காவல் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |