சட்டவிரோத வியாபாரம் -காவல்துறை உத்தியோகத்தர் சிக்கினார்
திருகோணமலை தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இன்று (01) மாலை 96 ம் கட்டை கண்டி திருகோணமலை பிரதான வீதியின் பாலத்தடியில் வைத்து கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் திருகோணமலை தலைமையக காவல் நிலையத்தில் கடமையாற்றி வரும் (54) வயதுடைய முள்ளிப்பொத்தானை 10ம் கொலனியை வசிப்பிடமாகவும் கொண்டவர் எனவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து ஒரு கிலோ கேரளா கஞ்சா பொதியுடன் இவரை கைது செய்துள்ளனர்.
இந்த கஞ்சா பொதியினை கைமாற்றுவதற்காக கொண்டு சென்ற வேளை கைதாகியதாக தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் தம்பலகாமம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நாளை (02) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தம்பலகாமம் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.