காவல்துறையினருக்கு கடுமையான கட்டுப்பாடு! தேசபந்து பிறப்பித்த அதிரடி உத்தரவு
நாட்டில் எதிர்வரும் காலங்களில் காவல்துறை உத்தியோகத்தர்கள் தமது சொந்த ஊரில் கடமையில் ஈடுபட அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையப் பொறுப்பதிகாரிகள், துறைசார் பொறுப்பதிகாரிகள் முதல் காவல்துறை உத்தியோகத்தர்கள் வரையிலான பதவி நிலைகளை வகிப்பவர்கள் இவ்வாறு பணியாற்ற இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
இதேவேளை இனிவரும் காலங்களில் சொந்த ஊரில் அல்லது அவர்களது மனைவியரின் சொந்த ஊரில் கடமையில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையப் பொறுப்பதிகாரிகள், துறைசார் பொறுப்பதிகாரிகள் முதல் காவல்துறை உத்தியோகத்தர்கள் வரையிலான பதவி நிலைகளை வகிப்பவர்கள் தங்களது ஊரில், மிக அருகாமையில் அல்லது மனைவியின் ஊரில் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உத்தரவிட்டுள்ளார்.
விசேட குழு நியமனம்
இதற்காக விசேட குழுவொன்றை காவல்துறைமா அதிபர் நியமித்துள்ளார். சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்தக் குழுவிற்கு தலைமை தாங்க உள்ளார்.
பாதாள உலகக் குழு செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்ட போது, சொந்த ஊரில் பணியாற்றும் காவல்துறை உத்தியோகத்தர்களினால் சில குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியவில்லை என தெரியவந்துள்ளது.
இதன் காரணத்தினால் சொந்த ஊரில் பணியாற்றும் காவல்துறை உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |