சட்டத்தரணி மற்றும் மனைவி படுகொலை : பொதுமக்களிடம் காவல்துறை உதவி கோரல்
தலங்கம, அக்குரேகொட பகுதியில் நேற்று (13) சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
அந்தவகையில் இக்குற்றத்தைச் செய்த துப்பாக்கிதாரிகள் ஹோமாகம, பொத்துஅராவ வீதி, அத்துருகிரிய காவல்துறை பிரிவு, கொட்டாவ மற்றும் மாகும்புர ஆகிய பகுதிகள் ஊடாகப் பயணித்துள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நேற்று (13) மாலை வேளையில் மேற்கூறிய பாதைகளில் பயணித்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள டேஷ் கேமராக்களில், சந்தேகநபர்கள் பயணித்ததாகக் கருதப்படும் EP KI-7738 இலக்கத்தைக் கொண்ட கார் பயணிக்கும் காட்சிகள் பதிவாகியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கொழும்பில் பயங்கரம்: வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சட்டத்தரணி மற்றும் மனைவி - களத்தில் குதிக்கும் CID
10 விசேட காவல்துறை குழுக்கள்
எனவே, நேற்று மாலை இப்பகுதிகளில் பயணித்த வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள், தமது வாகனக் கமராக்களைச் சோதித்து, குறித்த கார் தொடர்பான காட்சிகள் ஏதேனும் இருப்பின் உடனடியாகப் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அக்குரேகொட பகுதியிலுள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில், காரினுள் இருந்த தம்பதியினர் மீது மற்றுமொரு காரில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
இக்கொலைச் சம்பவம் குறித்து காவல்துறை மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் 10 விசேட காவல்துறை குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் தகவல் வழங்குவோரின் இரகசியத்தன்மை முழுமையாகப் பாதுகாக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் தகவல் வழங்குவதற்கு மேல் மாகாண தெற்கு பிரிவு பிரதி காவல்துறை மா அதிபர் - 071 8598008, பணிப்பாளர் / மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு - 071 8592279 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |