உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு காவல்துறை அழைப்பு
ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் விசாரணை குழுவினர் அழைப்பானை விடுத்துள்ளனர்.
குறித்த அழைப்பானை நாளை (13.12.2026) விடுக்கப்பட்டுள்ளது.
கஸ்ஸப தேரர் நாளை கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வாக்குமூலம்
கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி விஹாரமகாதேவி பூங்கா வளாகத்தில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது ஏற்பட்ட அமைதியின்மையின் போது, காவல்துறை அதிகாரிகள் தம்மைத் தாக்கியதாக ஊடகங்களிடம் தேரர் தெரிவித்த கருத்து தொடர்பான விசாரணைக்காகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்று (11) காலை 10 மணிக்கு கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் விசாரணைப் பிரிவு 02 இல் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு தேரருக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
உடமலுவ காவல் நிலையத்தின் ஊடாக இந்த அறிவித்தல் வழங்கப்பட்டிருந்த போதிலும், தேரர் வாக்குமூலம் வழங்குவதற்காக ஆஜராகவில்லை.
அதேவேளை, தம்மால் ஆஜராக முடியாது எனவும் அவர் அறிவிக்கவில்லை.
இதனையடுத்து, நாளை (13) கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் விசாரணைப் பிரிவில் ஆஜராகி குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு உடமலுவ காவல்துறையினர் மீண்டும் அறிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |