கொழும்பில் பல்கலைக்கழகங்களை சூழ பலப்படுத்தப்படும் பாதுகாப்பு
கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழகங்களைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தவும் இரவு ரோந்துப் பணியை அதிகரிக்கவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் களனிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் உள்ளிட்ட பேராசிரியர்கள் குழு அண்மையில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் அவர்களுடன் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து காவல்துறை மா அதிபருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் திருட்டுச் சம்பவங்கள்
இந்த சந்திப்பில் காவல்துறை மா அதிபர் விக்ரமரத்ன, மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக உபவேந்தர் சுட்டிக்காட்டியதையடுத்து, அமைச்சர் மற்றும் காவல்துறை மா அதிபர் ஆகியோர், பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
மாணவர் விடுதிகளுக்கு அருகில் பாதுகாப்பு
ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழகங்களின் மாணவர் விடுதிகளுக்கு அருகில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு உபவேந்தர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, பல்கலைக்கழகங்களுக்கு அருகாமையில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அமைச்சர் அறிவித்துள்ளார்.
