முச்சக்கரவண்டி சாரதிகளால் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்ட நிலை -தீவிர விசாரணையில் காவல்துறை(காணொளி)
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றதற்காக உள்ளூர் முச்சக்கர வண்டி சாரதிகள் குழுவினால் செயலி அடிப்படையிலான டாக்ஸி சேவையின் சாரதியை திட்டிய சம்பவம் தொடர்பில் காலியில் உள்ள சுற்றுலா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் பதிவு செய்யப்பட்ட காணொளிக் காட்சிகளின்படி, சாரதியை அநாகரிகமாகத் திட்டியதாகவும், சுற்றுலாப் பயணிகளை அந்தப் பகுதிக்கு ஏற்றிச் செல்ல வேண்டாம் என எச்சரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் காணொளி காட்சிகள்
PickMe driver being harassed in Galle pic.twitter.com/pBKHI0vBFo
— Ajit Gunewardene (@AjitGunewardene) February 7, 2023
இந்த சம்பவம் நேற்று (07) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, குறித்த சம்பவத்தின் காணொளி காட்சிகள் சமுக ஊடகங்களில் பகிரப்பட்டதை அடுத்து சுற்றுலா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் இதுவரை முறையான முறைப்பாடுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும், ஆனால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சம்பந்தப்பட்டிருப்பதால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுலா காவல்துறை பிரிவு தெரிவித்துள்ளது.
முச்சக்கர வண்டி சாரதிகளின் நடத்தை
பல சமூக ஊடக பயனர்கள் உள்ளூர் முச்சக்கர வண்டி சாரதிகளின் நடத்தை குறித்து அவதூறு செய்துள்ளனர், உள்ளூர் முச்சக்கர வண்டி மாஃபியா சுற்றுலாவை கடுமையாக பாதிக்கும் என்று சுட்டிக்காட்டினர்.
உள்ளூர் முச்சக்கரவண்டி சாரதிகளின் நடத்தை பாதகமாக அமையும் எனவும், இதன் விளைவாக வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் துன்புறுத்தப்படுவதாகவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
