சமய போதனைகளுக்கு இலக்காகி தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு : அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறையினர் எச்சரிக்கை
நபர்களை இலக்கு வைத்து சமய போதனைகளை மேற்கொண்ட நபர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்ததையடுத்து, அவரது போதனை நிகழ்வுக்கு சென்றிருந்த மேலும் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பில் காவல்துறையினர் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதுபற்றித் தெரிவிக்கையில்,
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
“இவ்வாறு மேற்படி நபரின் சமய போதனைகளுக்கு சென்றிருந்தவர்கள் தமது குடும்பத்திலும் காணப்படுவார்களானால் அவர்கள் தொடர்பில் மிகவும் அவதானம் செலுத்த வேண்டியது அவசியம்.
நாட்டில் கடந்த சில தினங்களாக சந்தேகத்திற்கிடமான வகையில் இடம் பெற்றுள்ள ஏழு மரணங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பை குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
ஹோமாகம பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ள சமயமொன்றுடன் தொடர்புபட்டவரின் சகாக்கள் என குறிப்பிடப்படும் இளைஞர் ஒருவரும் யுவதியும் உடலில் நஞ்சு கலந்ததால் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேற்படி யுவதியின் சடலம் யக்கல பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அம்பலாங்கொடை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 34 வயது நபரின் சடலம் அவர் தங்கியிருந்த மகரகம பிரதேசத்தில் உள்ள விடுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பின்ணனி
நாடளாவிய ரீதியில் சமய போதனைகளில் ஈடுபட்டிருந்த ருவன் பிரசன்ன குணரத்ன என்ற நபர், தமது உடலில் நஞ்சேற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதனையடுத்து அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மரணமடைந்த ருவன் பிரசன்ன குணரத்னவின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த இளைஞர் மற்றும் யுவதியும் நேற்றைய தினம் மரணமடைந்துள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவருமே ஒரே விதமான விஷம் உடலில் கலந்ததால் மரணமடைந்துள்ளதாக சந்தேகம் நிலவுகின்றது.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |