நிதி மோசடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை
இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் போன்று தம்மைக் காட்டிக்கொண்டு நிதியுதவி வழங்குவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுயதொழில் செய்வதற்கு நிதியுதவி வழங்குவதாகவும், சிறுவர்களுக்கான புத்தகங்களை வழங்குவதாகவும் கூறி பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்துடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நிதி மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது
அமைப்பில் உறுப்பினராக சேர மக்களிடமிருந்து கட்டணமாக 600 ரூபாய் வசூலித்துள்ளதுடன் அரச சார்பற்ற நிறுவன அதிகாரியாகத் தன்னைக் காட்டி மக்களுக்கு நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்தமைக்காக சியம்பலாண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவர் முதலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உறுப்பினர் கட்டணம் என ஏமாற்றி வசூலித்த 26 ஆயிரம் ரூபாய் பணத்துடன் அத்திமலே, கெமுனுபுர பிரதேசத்தில் வைத்து நேற்று (05) குறித்த பெண் கைது செய்யப்பட்டதுடன், அவர் கூட்டுறவு கிராம வங்கியில் பொதுமக்களை ஏமாற்றி 1 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் பெற்று அதை வங்கியில் வைப்புச் செய்திருந்தார்.
இதேவேளை அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளாக வேடம் அணிந்து பொதுமக்களை ஏமாற்றி 70 ஆயிரத்து முந்நநூறு ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்ட சியம்பலாண்டுவ, மதுகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினர் கோரிக்கை
சந்தேகநபர்கள் மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரும், சியம்பலாண்டுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரும் ஆவர்.
இந்நிலையில் சந்தேகநபர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளில் இவ்வாறு செயற்பட்டார்களா என்பது தொடர்பில் அத்திமலே மற்றும் சியம்பலாண்டுவ காவல்துறையினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் நாட்டில் இடம்பெறும் இவ்வாறான நிதி மோசடிகளுக்கு ஆளாக வேண்டாம் என காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |