தையிட்டி விகாரையை வைத்து அரசியல் நாடகம்: அநுர தரப்பு பகிரங்கம்
வடக்கு கிழக்கில் சில தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அரசியல் இருப்பை தக்க வைப்பதற்காக தையிட்டி விகாரையை வைத்து அரசாங்கத்துக்கு எதிராக மக்களை திசைதிருப்தி குழப்புகின்ற செயற்பாட்டு அரசியல் நாடகங்களை நிகழ்த்தி கொண்டிருப்பதாக தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
பழைய மாவட்ட செயலகத்தில் நேற்று(11) இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது, அவர் மேலும் கூறியதாவது, “சில அரசியல்வாதிகள் தங்களது அரசியல் இருப்புக்காக பல தரப்பட்ட குழப்புகின்ற செயற்பாட்டை வடக்கு கிழக்கில் ஏற்படுத்தி வருகின்றனர்.
ஜனாதிபதியின் நோக்கம்
விசேடமாக தையிட்டி விகாரை தொடர்பான குழப்ப நிலையை அவதானித்து பார்த்தால் குறிப்பிட்ட தினமான போயா தினத்தில் மட்டும் அந்த விகாரை தொடர்பான ஞாபகம் ஏற்படுகின்றது அதை கொண்டு இன்று மக்களை அரசாங்கத்துக்கு எதிராக திசை திருப்புகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் அரசியல் வாதிகள் தங்களது இருப்பை தக்க வைப்பதற்காக இந்த அரசியல் நாடகங்களை நிகழ்த்தி கொண்டிருக்கின்றனர், ஆனால் அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் இன மத மொழி கடந்து எந்தவொரு வேறுபாடுகளும் இன்றி அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
இந்த நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து விடையங்களையும் இலங்கையர்கள் என எண்ணி செயற்படுகின்றோம், எங்களது ஜனாதிபதியின் கருது கோலும் அதுதான் நாட்டு மக்கள் அனைவரும் சமன் அவர்களின் வாழ்வை ஒளியேற்ற வேண்டும் என்பது தான் பிரதான நோக்கம்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        