ஈழத்தின் பிம்பமாக காசா..! நெஞ்சைத் துளைத்த கிரேட்டாவின் அந்த வசனம்
காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டுசெல்ல முயன்ற 'மேடலின்' என்ற கப்பலில் அனைத்துலக செயற்பாட்டாளர்களின் ஒருவரான கிரேட்டா துன்பெர்க் சென்ற நிலையில், இஸ்ரேலிய ராணுவத்தால் அவர் கைது செய்யப்பட்டு ஸ்வீடனுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
அங்கு சென்றவுடன் செய்தியாளர்களிடம் பேசிய கிரேட்டா, “இஸ்ரேலிய இராணுவத்திற்கு நான் பயப்படவில்லை. ஆனால், காசாவில் நடைபெறும் இனப்படுகொலை தொடர்பில் உலகம் மௌனமாக இருப்பதை கண்டே பயப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இன அழிப்பு
இந்த நிலையில், அவருடைய கருத்து பலருக்கு ஈழத்தில் தமிழர்கள் எதிர்கொண்ட இனப்படுகொலையை நினைவூட்டுகிறது.

2009-இல் இலங்கையின் இறுதிப் போருக்குப் பின்னால், ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கண்காணிப்பிலும் இருந்தபோதும் படுகொலை செய்யப்பட்டனர்.
அதுபோலவே, இன்று காசா மக்களும், சர்வதேச அமைப்புகளின் பார்வைக்கு நடுவிலும் இன அழிப்பு செயல்களில் சிக்கியுள்ளனர்.
போர் குற்ற விசாரணை
இதேவேளை, இஸ்ரேல் தனது தாக்குதல் நடவடிக்கைகள் குறித்த சர்வதேச விசாரணையை எதிர்க்கும் நிலையில், இலங்கையின் போர் குற்ற விசாரணைகளும் அரசியல் அழுத்தங்களால் தடைப்பட்டதே நினைவுக்கு வருகிறது.

உலகம் முழுவதும் இனவழிப்பு செயல்கள் தொடரும் போது, கிரேட்டா துன்பெர்க் போன்ற துடிப்புள்ளவர்களின் உரிமைக்குரல்கள் காசாவாக இருந்தாலும், ஈழமாக இருந்தாலும் நீதிக்கான தேடலின் ஒரு தொடக்கமாக இருக்கலாம்.
இவ்வாறானதொரு பின்னணியில், கிரேட்டாவின் இந்த கருத்துக்கு பல்வேறு இடங்களில் ஆதரவு குரல்கள் உயர்ந்துள்ளதுடன், சமூக ஊடகங்களில் #GazaGenocide என்ற ஹேஷ்டேக் பரவத்தொடங்கியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        