கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன காலமானார்: தமிழ் மக்களின் உரிமைக்காக ஒலித்த குரல்
சிரேஸ்ட அரசியல்வாதியும் நவ சம சமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன (Wickramabhu Karunaratne) காலமானார்.
இவர் நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று (25.7.2024) தனது 81 ஆவது வயதில் காலமாகினார்.
விக்ரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பதுடன் கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக கொழும்பில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்.
தமிழ் மக்களின் உரிமை
அத்துடன் இன பிரச்சினையை தீர்க்கும் எண்ணம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தமிழ் தேசியப் பிரச்சினை தொடர்பான தீர்வில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறி வந்திருந்திருந்தார்.
மேலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனவர்கள் தொடர்பான நம்பிக்கை, இராணுவ கையிருப்பில் உள்ள நிலங்களை மக்களுக்கு மீள கையளித்தல் போன்ற விடயங்களை தனது அதிகாரத்தை கொண்டு தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் இவர் தெரிவித்திருந்தார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கலாநிதி
இலங்கை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் (University of Cambridge) கலாநிதி பட்டம் பெற்றுக் கொண்டார்.
அவர், 18 ஆண்டுகளாக பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிராக குரல் கொடுத்த காரணத்தினால் அவர் தனது தொழிலை இழக்க நேரிட்டது.
இடதுசாரி கட்சித் தலைவர்
1977ஆம் ஆண்டில் விக்ரமபாகு கருணாரட்ன நவ சமசமாஜ கட்சியில் இணைந்து கொண்டிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பல்வேறு இடதுசாரி கட்சித் தலைவர்களுடன் கடந்த காலங்களில் நெருக்கமான தொடர்புகளை பேணியிருந்தார்.
அவரின் மறைவையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |