மரபு ரீதியாக மூடப்பட்ட பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி விருப்பத்திற்கு அமைய அவரது உடல் ரோமில் உள்ள புனித மரியா மேஜியோரே பசிலிக்காவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் (Pope Francis) திருத்தந்தையின் இறுதி ஆராதனைகள் இலங்கை நேரப்படி இன்று மாலை 1.30 மணியளவில் வத்திக்கான் (Vatican) நகரில் உள்ள புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
இறுதித் திருப்பலியை கர்தினால் கல்லூரியின் தலைவர் கர்தினால் ஜியோவானி பெட்டிஸ்டா ரே நடத்தவுள்ளார்.
திருவுடல் பேழை
புனித பேதுரு பசிலிக்காவில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கடந்த சில தினங்களாக இரவு முழுவதும் மக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை மரபு ரீதியாக வெள்ளிக்கிழமை (25) இரவு மூடப்பட்டது.
இதேவேளை, இன்றையதினம் இலங்கை உள்ளிட்ட உலகநாடுகளில் கத்தோலிக்க மக்கள் துக்கதினம் அனுஷ்டிப்பதுடன் பல ஆலயங்களில் இரங்கல் திருப்பலிகளும் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உட்பட 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாப்பரசரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
