அணு ஆயுத ஒப்பந்தம் காலாவதி! ரஷ்யாவின் அடுத்த நகர்வு
அமெரிக்காவுடன் ரஷ்யா கொண்டிருந்த கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமான ‘நியூ ஸ்டார்ட்’ வியாழக்கிழமை காலாவதியானதற்கு, ரஷ்யா தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளது.
அணு ஆயுதங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீங்கினாலும், உலகளாவிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ரஷ்யா பொறுப்புடன் நடந்து கொள்ளும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
பனிப்போர் காலம் தொடங்கி இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து வந்த அணு ஆயுதக் குறைப்பு முயற்சிகளில், இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய அடையாளமாகக் கருதப்பட்டது.
எதிர்கால சூழ்நிலை
இதன் படி, ரஷ்யா மற்றும் அமெரிக்கா தலா 1,550 அணு ஆயுதங்களை மட்டுமே வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது ஒப்பந்தம் முடிவடைந்துள்ள நிலையில், புதிய அணு ஆயுதப் போட்டி உருவாகலாம் என்ற கவலைகளும் எழுந்துள்ளன.

Image Credit: The Boston Globe
இது தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது மிகவும் வருத்தமளிப்பதாக இருப்பதாக தெரிவித்தார். இனி எடுக்கப்படும் நடவடிக்கைகள், எதிர்காலத்தில் உருவாகும் சூழ்நிலைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முத்தரப்பு அணு ஆயுத ஒப்பந்தம்
மேலும், இந்த விவகாரத்தில் ரஷ்யா மிகுந்த பொறுப்புடனும் கவனத்துடனும் செயல்படும் என்றும், நாட்டின் தேசிய நலன்களுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பெஸ்கோவ் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்க ரஷ்ய ஜனாதிபதி புடின் முன்மொழிந்தார்.ஆனால், அதற்கு நேரடி பதிலை அளிக்காத அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், சீனாவையும் சேர்த்த முத்தரப்பு அணு ஆயுத ஒப்பந்தமே தமக்கு விருப்பம் என தெரிவித்திருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |