ரணிலின் சீனப் பயணத்துடன் கடன் மறுசீரமைப்பில் சாதக நிலை
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று சீனாவுக்கு பயணமாகும் நிலையில், சிறிலங்காவின் கடன் மறுசீரமைப்பு பேச்சுத் தளத்தில் ஒரு முக்கிய சாதகத்தன்மைக்குரிய அறிகுறிகளை சீனா வெளிப்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த வருடம் எழுந்த மிக மோசமான பொருளாதார நெருக்கடியை அடுத்து சிறிலங்காவுக்குரிய கடன் மறுசீரமைப்பு பேச்சுக்களில் இந்தியா ஜப்பான், பரிஸ் கிளப் ஆகியன ஈடுபட்டிருந்த போதிலும் சீனா இந்த அணியில் இணையாமல் பின்னடித்த நிலையில் தற்போது ரணில் விக்ரமசிங்கவின் சீனப்பயணத்துடன் சீனா இந்த சாதக நிலையை வெளிப்படுத்தியதாக தெரிகிறது.
ஆரம்ப உடன்பாட்டு ஒப்பந்தம்
அதன் அடிப்படையில் சீனா இலங்கைக்கு வழங்கிய கடன் தொகையில் ஒரு மறுசீரமைப்பை செய்யும் வகையில் சிறிலங்கா அதிகாரிகளுடன் ஒரு ஆரம்ப உடன்பாட்டு ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவுடனான இந்த ஒப்பந்தம் அனைத்துலக நாணய நிதிய நிர்வாகக் குழுவின் ஒப்புதலைபெற்றவுடன் நாணய நிதியத்தின் அடுத்த கட்ட தவணை நிதி கிட்டுமெனவும் சிறிலங்கா நிதியமைச்சகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான புதிய கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் குறித்து இதுவரை தமது அமைப்புக்கு அறிவிக்கப்படவில்லையென இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த அதிகாரியான பீட்டர் ப்ரூயர் தெரிவித்தார்.