யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முயற்சிகள் தொடர்கின்றன - ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு
இலங்கை யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் (G. L. Peiris) தெரிவித்தார்.
ஐ.நா. அரங்கில் வலுவான இருதரப்பு உறவுகளையும் ஒத்துழைப்பையும் வெளிநாடுகளிடம் இலங்கை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
17 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்களை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வெளிநாட்டு அமைச்சில் வைத்து நேற்றுமுன்தினம் சந்தித்து கலந்துரையாடினார்.
டிசம்பர் 21ஆந் திகதி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் 17 தூதுவர்களும் தமது சான்றுகளை வழங்கியதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
வெளிநாடுகளில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான இலங்கையர்கள் தமது சொந்த நாட்டிற்கு திரும்பி வருவதால், பணம் அனுப்பும் நடைமுறை பாதிக்கப்பட்டுள்ளதை இதன்போது பீரிஸ் ஒப்புக் கொண்டார்.
இதனால் பல நாடுகளுடனான அரசாங்கங்களுடன் அரசாங்கம் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கை 30 வருடகால மோதலினால் அழிக்கப்பட்டதாக விளக்கிய ஜி.எல்.பீரிஸ், மோதல்கள் பல வடுக்களை விட்டுச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஏனைய நாடுகள் மோதல்களிலிருந்து மீட்சியடைய பல தசாப்தங்கள் எடுத்ததாகவும், எஞ்சிய பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக இலங்கை ஒவ்வொரு முயற்சியையும் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.