முடிவிற்கு வந்தது தபால் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அஞ்சல் ஊழியர்கள் தங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை இன்று (24) மாலை 4 மணி முதல் கைவிட்டு திட்டமிட்டபடி தங்கள் கடமைகளைச் செய்ய ஒப்புக்கொண்டதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அஞ்சல் ஊழியர்களுக்கும் விடத்திற்குப் பொறுப்பான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் இடையே இன்று(24) நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலுக்குப் பிறகு அமைச்சர் ஊடகங்களுக்கு இந்த தகவலை வெளியிட்டார்.
இரண்டு முக்கிய கோரிக்கைகள்
"இரண்டு முக்கிய கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால் அந்தக் கோரிக்கைகளைப் பற்றி கலந்துரையாட அரசாங்கம் தயாராக இல்லை என்று நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்தோம். மீதமுள்ள 17 கோரிக்கைகள் குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம்."
"அதன்படி, அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று மாலை 4 மணி முதல் அஞ்சல் தொழிற்சங்க நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு திட்டமிட்டபடி தங்கள் கடமைகளைச் செய்ய ஒப்புக்கொண்டுள்ளன."
குவிந்து கிடக்கும் கடிதங்கள் மற்றும் பொதிகள்
"சுமார் 6 நாட்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து அஞ்சல் ஊழியர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். கடிதங்கள் மற்றும் பொதிகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை விடுவிக்க வேண்டும். அந்த தொழிற்சங்கங்களுடன் தொடர்புடைய அனைவரும் வந்து அந்த பணிகளை தாமதமின்றி முடிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்."என்றார்.
இதேவேளை அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர், கடந்த 17 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த தொடர்ச்சியான வேலைநிறுத்தம் இந்த தருணத்திலிருந்து இடைநிறுத்தப்படுவதாக கூட்டு அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 11 மணி நேரம் முன்
