அஞ்சல் துறையை முன்னேற்ற எடுக்கப்பட்ட தீர்மானம்
இலங்கையின் தபால் திணைக்களம் இந்த ஆண்டிற்கான வருமானத்தை 21 பில்லியன் ரூபாயாக பதிவுசெய்ய தீர்மானித்துள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.
திறைசேரி நிதியில் இருந்து சுயாதீனமான ஒரு தன்னிறைவு நிறுவனமாக இயங்கவுள்ளதாக தெரிவித்த அவர், பொதுச் சேவை வழங்குநரிடமிருந்து வணிக சேவை வழங்குனராக திணைக்களத்தின் புதிய கண்ணோட்டத்தை விளக்கி, வருமான இடைவெளியைக் குறைப்பதற்காக திணைக்களம் தனியார் துறையுடன் மூலோபாய ஒத்துழைப்பை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்காக உலகளாவிய லொஜிஸ்டிக்ஸ் மற்றும் பக்கேஜ் விநியோக நிறுவனமான யுனைடெட் பார்சல் சர்வீஸுடன் இலங்கை தபால் திணைக்களம் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளதாகவும் சத்குமார கூறினார்.
நினைவு முத்திரை
அதுமாத்திரமன்றி, முதன்முறையாக தனியார் வங்கியான ஹட்டன் நெஷனல் வங்கியின் 135 ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, தபால் திணைக்களம் முதன்முறையாக நினைவு முத்திரையொன்றினை வழங்கி வைத்திருப்பதனையும் அவர் குறிப்பிட்டார்.
பாரம்பரிய அஞ்சல் சேவைகள் தற்காலத்தில் உலகளாவிய அளவில் பயன்பாட்டில் சரிவைக் கண்டுவருவதாகவும், ஆனால் வணிக அஞ்சல் சேவைகள், விநியோகத்தின் போது பணம் செலுத்தக்கூடிய வசதியை கொண்டிருப்பதாகவும் (COD) அவர் குறிப்பிட்டார்.
விழிப்புணர்வு இன்மை
இந்த விநியோகத்தின் போது பணம் செலுத்தக்கூடிய முறைமையானது, சந்தையில் 20-25 சதவீதத்தை கைப்பற்றும் திறனைக் கொண்டுள்ளன, ஆனால் துரதிர்ஷ்டவசமாக மக்கள் மத்தியில் இது தொடர்பான, விழிப்புணர்வு இல்லாததன் காரணத்தால் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை,என்று அவர் மேலும் கூறினார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு, தபால் திணைக்களம் 13.6 பில்லியன் ரூபாய் வருமானத்தை பதிவு செய்து, 3.2 பில்லியன் ரூபாய் இழப்பையும் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.