வறுமையை ஒழிப்பதற்கான யோசனை நாடாளுமன்றில் முன்வைப்பு
வறுமையை ஒழிப்பதற்கான யோசனை நேற்று சிறிலங்கா நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது..
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இதனை முன்வைத்துள்ளார்.
நலன்புரி கொடுப்பனவு

'அஸ்வெசும' எனப்படும் ஆறுதல் நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை முன்வைத்தார்.
17 ஆயிரம் ரூபாவிற்கும் குறைந்த வருமானத்தை பெறுபவர்களுக்கே இந்த நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்தக் கொடுப்பனவு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கப் பெறுமா? என அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தத் திட்டத்திற்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களை இணைக்கும் போது, அங்கு அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் விபரங்கள்

இதன்போது, குறுக்கிட்ட நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் விபரங்கள் தவறவிடப்பட்டிருக்குமாயின் அது தொடர்பான விபரங்களை கையளிக்குமாறு கூறினார்.
இதனையடுத்து, கருத்து வெளியிட்ட அமைச்சர், ஜீவன் தொண்டமான், பெருந்தோட்டத்தொழிலாளர்களை இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் உதயகுமார், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோரும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்