பிரபாகரன் மீளவும் தலையெடுக்க முடியாது - அடித்துக் கூறுகிறார் நவீன் திஸநாயக்க
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மீண்டும் தலை தூக்கவே முடியாது என நவீன் திஸநாயக்க கூறியுள்ளார்.
பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், தகுந்த நேரத்தில் அவர் வெளிப்படுவார் என பழ.நெடுமாறன் கூறியது பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்திருக்கிறது. இதுகுறித்து ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் எம்.பி., நவீன் திஸாநாயக்க கூறுகையில்,
பழ.நெடுமாறன் எந்த அடிப்படையில் தெரிவித்தார்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக இந்தியாவைச் சேர்ந்த பழ.நெடுமாறன் தெரிவித்திருக்கிறார். அவர் எந்த அடிப்படையில் அவ்வாறு தெரிவித்தார் என்று எனக்கு தெரியாது. என்றாலும் பிரபாகரன் உயிரோடு இல்லை என்பதை எங்கள் இராணுவம் உறுதிப்படுத்தியிருக்கிறது.
அதனால், இது தொடர்பாக நாங்கள் அலட்டிக்கொள்ள தேவையில்லை. இருப்பினும் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற தகவல், வடக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கான முயற்சியாக இருக்கலாம். எவ்வாறு இருந்தாலும் மீண்டும் பிரபாகரன் தலை தூக்கப்போவதில்லை.
13ம் திருத்தம்

அதே நேரம் அரசியலமைப்பின் 13 ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அழுத்தம் பிரயோகிப்பதற்கும் இது மாதிரியான செய்தியை பரப்புவதாக தெரிவிக்க முடியாது. ஏனென்றால், 13ம் திருத்தம் என்பது எங்கள் அரசியல் அமைப்பில் இருக்கிறது. 13ம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம், நாடு பிளவுபடும் என சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால், 13 ம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாடு பிளவுபடாது என 1987 ல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
செல்வாக்குடன் இருந்த பிரபாகரன்

அன்று மிகவும் பயங்கரமான நிலைமையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அப்போது பிரபாகரனும் செல்வாக்குடன் இருந்தார். வடக்கு கிழக்கு மாகாணமும் பிரபாகரனின் ஆதிக்கத்தின் கீழ் தான் இருந்தது. ஆனால், தற்போது அந்த நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட நிலையே இருக்கிறது.
வடக்கு, கிழக்கு மாகாணம் இணைக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில்தான் அங்குள்ள சிங்கள, முஸ்லிம் மக்கள் உறுதியாக உள்ளனர். இந்தியாவில் சமஷ்டி முறையே இருக்கிறது. ஆனால், எங்கள் நாட்டில் மாகாண முறையே இருக்கிறது. மாகாண அதிகாரங்கள் அரசியலமைப்பில் தெளிவாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதனால், மாகாணங்களுக்கு காவல்துறை, காணி அதிகாரங்களை வழங்குவதன் மூலம் நாடு பிளவுபடப்போவதில்லை. 13 ம் திருத்தத்தை முழுவதுமாக நடைமுறைப்படுத்தப் போவதாக தெரிவித்து, ஆர்ப்பாட்டம் செய்யும் அளவிற்கு அதில் ஒன்றும் இல்லை’’என்று அவர் கூறியுள்ளார்.