இலங்கை அரசியலில் முத்தாரமென ரணிலுக்கு புகழாரம்
நாட்டின் சமூக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வைத் தேடும் அரச தலைவரின் முயற்சியில் முத்தாரமாக நியமனம் பெற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மிகக்குறுகிய காலத்தில் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத் தருவார் எனும் நம்பிக்கை தற்போது தோன்றியுள்ளது என என சிறிலங்கா ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.ஐ.சல்மான் வஹாப் தெரிவித்தார்.
தற்கால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை அரசியலில் ஒரு முதுசமாக இருக்கும் தற்போதய பிரதமர் சர்வதேச உறவிலும் நிலையான ஒரு தடத்தை ஏற்படுத்திக் கொண்டவர். குறிப்பாக பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமனம் பெற்றவுடன் அவரால் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார சிக்கனத் திட்டங்கள் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.
இச்சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களும் கட்சிகளும், சுயநலப்போக்கினை கைவிட்டு மக்கள் நலனுக்காக பிரதமரின் செயற்பாடுகளுக்கு ஆதரவினை வழங்க வேண்டும். அவசரம் கொள்ளாது அவரின் சிந்தனை, செயற்பாடுகளுக்கு குறுகியகால அவகாசமேனும் வழங்கி பொறுமை காக்க வேண்டும்.
இவற்றின் அடிப்படையில் தான் சர்வதேச சமூகமும் இலங்கை மீது ஒரு பார்வையை செலுத்திக் கொண்டிருக்கின்றன
அரச தலைவரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்த புதிய பயணம் அழகிய விடியலொன்றை இலங்கைத் திருநாட்டில் ஏற்படுத்தும் எனும் நம்பிக்கையுடன் அவரது முயற்சிகள் வெற்றியடைய உளம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்” என்றார்.

