முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள உயர்வு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என மானிப்பாய பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளமானது வலயக் கல்வி அலுவலகம் மூலமாக வழங்கப்படும் உதவித்தொகையான 6 ஆயிரம் ரூபாவாக மட்டுமே காணப்படுகின்றது.
வடக்கு மாகாண சபை
2013 வடக்கு மாகாண சபை அமைந்த பின் அப்போதைய வடக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த பா.கஜதீபன், போன்றோரின் முயற்சியாலும் அப்போதைய வடக்கு மாகாண கல்வி அமைச்சராக இருந்த குருகுலராஜாவின் ஒப்புதலாலுமே அது கூட சாத்தியப்பட்டது.
அதேநேரம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் நடத்தப்படும் முன்பள்ளிகளின் ஆசிரியர் ஒருவருக்கு 30,000 ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை நிரந்தர சம்பளமாக வழங்கப்படுகிறது.
இதனை வடக்கு மாகாண சபையின் கீழ் எடுக்க நடவடிக்கை எடுத்த போதும் அது சாத்தியப்படவில்லை. இன்றும் முழுமையாக பாதுகாப்பு அமைச்சின் கீழேயே இது நடைமுறையிலுள்ளது.
6000 ரூபா உதவித்தொகை
மேலும், 2018இன் பின்னர் வடக்கு மாகாண சபை பதவி நிறைவிற்கு பின் வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்கள் சிலவற்றால் நடாத்தப்படும் முன்பள்ளிகளில் நிரந்தர நியமனமுள்ள, போட்டிப் பரீட்சை மூலம் நியமனம் செய்யப்பட்ட இடமாற்ற விதிகளுக்கு உட்பட கூடிய முன்பள்ளி ஆசிரியர்களும் 30,000 ரூபாவிற்கு உட்பட்ட சம்பளத்துடன் வடக்கு மாகாண சபையால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இருந்த போதும் பெரும்பாலான முன்பள்ளி ஆசிரியர்கள் வெறும் 6000 ரூபா உதவித்தொகை மட்டுமே வாழ்வாதாரமாக பெறுகின்ற இடரான பொருளாதார நிலையிலேயே கடமையாற்றி வருகின்றனார்.
இது மிகவும் பாதிப்பான நிலையாகும் என்பதுடன் முன்பள்ளி ஆசிரியர்களிடையே ஏற்றத்தாழ்வுகளையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு பலத்த எதிர்பார்ப்புக்களோடு வடக்கு மாகாண தமிழ்மக்கள் வாக்களித்து 05 ஆசனங்களை வழங்கியுள்ளனர்.
இந்தச் சூழலில் ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியாகவுள்ள வடக்கு மாகாண ஆளுநர் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தி தற்போதைய பிரதமரே கல்வி அமைச்சராகவும் உள்ள காரணத்தினால் ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
இதன் மூலம் வடக்கு மாகாணத்திலுள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள முன்பள்ளிகள் உட்பட அனைத்து விதமான முன்பள்ளிகளையும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்பள்ளிகளாக உள்வாங்கிட நடவடிக்கை எடுத்து அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஓய்வூதியத்துடன் கூடிய நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கும், சம்பள அதிகரிப்பினை வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
