கர்ப்பிணி பெண்ணை நடுவீதியில் சுட்ட காவல்துறையினர் - அமெரிக்காவில் பயங்கரம் (காணொலி)
கர்ப்பிணி பெண் மீது துப்பாக்கி சூடு
அமெரிக்காவில், கர்ப்பிணி பெண் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் நடுவீதியில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணியளவில், அமெரிக்காவிலுள்ள Kansas நகரில், கார் ஒன்றை ஆயுதங்களுடன் சிலர் கடத்திச் செல்வதாக தகவல் கிடைத்ததையடுத்து காவல்துறையினர் கார் ஒன்றைத் துரத்திச் சென்றுள்ளார்கள். ஒரு கட்டத்தில் அந்தக் கார் நிற்க, அந்தக் காரிலிருந்து இறங்கிய சாரதி ஓட்டம் பிடித்துள்ளார்.
அதே நேரத்தில், மற்றொரு பெண் காரிலிருந்து இறங்கியுள்ளார். அவர், காரில் ஒரு துப்பாக்கி இருப்பதாகக் கூறியுள்ளார். அவரை காவல்துறையினர் தரையில் படுக்குமாறு கூறியுள்ளார்கள். ஆனால், தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறிய அந்தப் பெண், தன்னால் தரையில் குப்புறப் படுக்க முடியாது என்று கூறியிருக்கிறார். காவல்துறையினர் திரும்பத் திரும்ப அவரிடம் தரையில் படுக்குமாறு கூறியும் அவர் கேட்காததால், அவரை ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். இரத்தவெள்ளத்தில் கிடந்த அந்தப் பெண்ணுக்கு கைவிலங்கு மாட்டியிருக்கிறார் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர்.
இந்த பயங்கர சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் இருந்த ஒரு பெட்ரோல் நிலையத்தில் தனது காருக்கு பெட்ரோல் நிரப்ப வந்த Shedanja என்னும் ஒரு பெண் இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ந்துபோயிருக்கிறார்.
Shedanja, என்ற அந்தப் பெண், தான் கர்ப்பிணி என்று கூறியும் கேட்காமல் அவரை காவல்துறையினர் சுட்டதால் அதிர்ச்சியடைந்து, அதன் பின் நடந்தவற்றை தனது மொபைலில் படம் பிடித்திருக்கிறார்.
தான் பெட்ரோல் நிரப்பிக்கொண்டிருக்கும்போது அந்தப் பெண் தான் கர்ப்பிணி என்று சொல்லியும் கேட்காமல் பொலிசார் அவரை சரமாரியாக ஐந்து முறை சுட்டதைத் தான் கண்ணால் பார்த்ததாக தெரிவித்துள்ள Shedanja, இத்தனைக்கும் அந்தப் பெண் கையில் துப்பாக்கியோ, ஏன் ஒரு குச்சியோ கூட இல்லை என்கிறார்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணிற்கு கைவிலங்கு
அத்துடன், அந்தப் பெண் இரத்தவெள்ளத்தில் கிடக்கும்போது, காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் வந்து அவருக்கு கைவிலங்கிட்டதாகவும் தெரிவித்துள்ளார் Shedanja.
துப்பாக்கியால் சுடப்பட்ட அந்தப் பெண்ணின் பெயர் Leonna Hale (26). அவர் ஒரு கருப்பினப்பெண். கர்ப்பிணிப் பெண்ணை சுட்ட காவல்துறையினர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்ட அந்த காவல்துறையினர் இருவரும் நிர்வாக விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாகவும், முறைப்படி, சம்பந்தப்பட்ட காவல்துறையுடன் தொடர்பில்லாத ஒரு அதிகாரி விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
