முல்லைத்தீவில் சுனாமி நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுனாமியால் உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24.12.2004 சுனாமியால் காவு கொள்ளப்பட்ட மக்களினுடைய நினைவு நாள் நாளைய தினம்(26) மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி அடைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுனாமியால் காவு கொள்ளப்பட்ட மக்கள் புதைக்கப்பட்ட இடமான புதுக்குடியிருப்பு பகுதியிலும் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்திலும் கள்ளப்பாடு உதயம் விளையாட்டு மைதானத்திலும் நாளை காலை சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வுகள்
முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்திலே நாளை காலை 08.00 மணிக்கு ஆரம்பமாக உள்ள நினைவேந்தல் நிகழ்வில், 08.00 மணிக்கு இந்து மத வழிபாடும் 8.15 க்கு முஸ்லிம் மத வழிபாடும் 8:30க்கு கத்தோலிக்க மத வழிபாடும் அத்துடன், அஞ்சலி நிகழ்வும் இடம்பெற உள்ளது.
இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் சுனாமியால் காவு கொள்ளப்பட்ட மக்கள் புதைக்கப்பட்ட இடமான புதுக்குடியிருப்பு பகுதியிலும் காலை 08.00 மணிக்கு அஞ்சலி நிகழ்வு ஆரம்பமாக உள்ளது.
கள்ளப்பாடு உதயம் விளையாட்டு மைதானத்திலும் நாளை காலை 08.00 மணிக்கு சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.
அனைவருக்கும் அழைப்பு
இந்த நிகழ்வுகளில் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்ற அதே வேளையிலே வழமை போன்று மாலை வேளையில் சுனாமியால் உயிரிழந்த உறவுகளின் ஒரு தொகுதியினர் புதைக்கப்பட்ட இடமாகிய முள்ளியவளை கயட்டை பகுதியிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெற இருக்கின்றது.
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாக்கப்பட்டிருக்கும் நிலைமையில் தங்களுடைய உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அனைவரையும் வருகை தருமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |