இலங்கையில் ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 17 வருடங்கள் நிறைவு
17 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தில் யாரும் எதிர்பார்த்திராத பாரிய அழிவு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் ஆட்சே பகுதியில் இருந்து புறப்பட்டது.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இதே ஞாயிற்றுக்கிழமையில் இடம்பெற்ற சுனாமி எனும் ஆழிப் பேரலைகளின் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக உலக வாழ் மக்களால் மறந்துவிட முடியாது. கடலுக்கடியில் உருவான அதிர்வெண் 9 தசம் 1 கொண்ட பூகம்பத்தால் 100 அடி உயரத்திற்கு அலைகள் கரைகளை தாக்கின.
இந்த சுனாமியின் சீற்றத்தால் 14 நாடுகளுக்கும் மேற்பட்ட 2 இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் செத்து மடிந்தனர். இதில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
இலங்கையையும் இந்த ஆழிப்பேரலை விட்டு வைக்கவில்லை. தமிழர் தாயகத்தில் ஆயிரக்கணக்கான மக்களை காவுகொண்டிருந்த இந்த அனர்த்தம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியது.
மக்கள் மனதில் நீங்கா வடுவாக பதிந்துவிட்ட சுனாமியால் இறந்தவர்களுக்கு வருடந்தோரும் இன்றைய டிசம்பர் 26 ஆம் திகதிளில் கடலோர பகுதிகளில் அஞ்சலிகள் செலுத்தப்படுகிறன.
இந்த அனர்த்தம் இடம்பெற்று 17 வருடங்கள் கடந்த போதிலும் அதனால் ஏற்பட்ட வடுக்களையும், இழப்புக்களையும் எவராலும் ஈடுசெய்ய முடியாது. தமது உறவுகளையும் உடைமைகளையும் இழந்த மக்கள் தற்போதும் அந்த கெட்டக் கனவை மறக்க நினைத்தாலும், கண்முன் நிழலாடும் அந்த காட்சிகள் கண்ணில் நீர்த்தாரைகளை சொரிகின்றது.
கிறிஸ்துவுக்கு முன் 426 ஆம் ஆண்டிலிருந்தே இந்த அனர்த்தம் ஆங்காங்கே சிறிதளவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்ற போதிலும் 2004 ஆம் ஆண்டுக்கு பின்னரே “சுனாமி” என்ற பெயரின் இலக்கணத்தை முழு உலகமும் அறிந்துக்கொண்டது.
இந்த வீரிய அனர்த்தம் இரண்டரை இலட்சம் மக்களை காவுகொண்டிருந்தது. போதிய விழிப்புணர்வு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலகட்டம் என்பதால் சுனாமிக்கு இவ்வாறு இலட்சக்கணக்கான மக்கள் பலி கொடுக்கப்பட்டனர்.
தற்போதைய காலகட்டத்தில் புதிய தொழிநுட்ப வசதிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அனர்த்தம் வருவதற்கு முன்னர் பாதுகாக்கும் நடைமுறைளும் உலக நாடுகளில் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது.
எவ்வாறெனினும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உந்து சக்தியாக இருந்தது 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இதே ஞயிற்றுகிழமை ஆட்கொண்ட சுனாமி பேரலை தான் என்றால் மிகையாகாது.
இந்த அனர்த்தம் அந்த காலக்கட்டத்தில் இலங்கையில் அரசியல் சூட்சுமங்களையும் வெளிகொண்டு வந்திருந்தது.
இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தை நேரடியாக பார்வையிடச் சென்றிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான், தமிழர் தாயக இழப்புக்களை பார்வையிடுவதிலிருந்து அப்போதைய அரசதலைவர் சந்திரிக்கா குமாரதுங்க தடுத்திருந்தார்.
ஆழிப்பேரலைக்கு பின்னரான நிவாரண உதவிகள் தமிழர் தாயகத்திற்கு கிடைப்பதும் அரசியல் சூழ்ச்சிகளால் தடுக்கப்பட்டன.
அப்போதைய தண்ணீரில் தத்தளித்த தமிழர் தாயகத்திற்கு உதவாத அரசியலை தற்போது கண்ணீரில் தத்தளிக்கும் வகையில் பெருந்தேசியவாதிகள் முன்னெடுத்து வருகின்றமை தமிழ் மக்கள் அறிந்த நிதர்சனம்.