நாட்டில் மீண்டும் இனவாத அரசியலுக்கு இடமில்லை - வடக்கில் ஜனாதிபதி உறுதி
நாட்டில் இனவாத அரசியல் மீண்டும் தலைதூக்குவதற்கு எந்த வாய்ப்பும் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு நகரில் நேற்று (02) காலை நடைபெற்ற வடக்கு தெங்கு முக்கோண துவக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுளார்.
ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில், ஒருவரையொருவர் நம்பாமல், சந்தேகப்பட்டு ஆயுதம் ஏந்தி முப்பது வருடங்கள் போராடினார்கள்.
இனவெறி அரசியல் தோன்ற வழி
அது நம் நாட்டில் நடந்த ஒரு பாரிய துயரம் ஆகும். இது நம் நாட்டு மக்களை அந்நியப்படுத்தியது. இனவெறி அரசியல் தோன்ற வழிவகுத்தது.
வடக்கிலும் தெற்கிலும் அதிகாரத்தைப் பெறுவதற்கான பிரதான கருவியாக இனவாதம் மாறியது. அந்த நிலைமையை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்நாட்டு மக்கள் தோற்கடித்தனர் என ஜனாதிபதி குறிப்பிட்டுளார்.
மீண்டும் இந்த நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்க மாட்டோம். அதேபோன்று, மக்களாகிய நீங்களும், இந்த இனவாத அரசியலை நிராகரிக்க வேண்டும் என்றும் நான் நம்புகிறேன்.
ஒற்றுமையை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் குறிக்கோள். அதற்காக எடுக்கக் கூடிய, சர்ச்சைக்கு உள்ளாகும் முடிவுகளை எடுப்பதற்கும் நாங்கள் சிறிதும் அஞ்சமாட்டோம்.
மேலும், நாம் எடுத்து வரும் முற்போக்கான நடவடிக்கைகளை பழைய, அழிவுகரமான, இனவாதப் பேச்சுக்களால் மாற்ற இடமளிக்க மாட்டோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
