ரணிலே சிறந்த தலைவர் : டக்ளஸ் புகழாரம்!
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு காணும் நடவடிக்கைகளில் தற்போதைய அதிபர் ரணில் ஆர்வம் காட்டி வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாது தற்போதைய காலச்சூழலில் நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றக் கூடிய தலைமைத்துவ ஆளுமையும் அவரிடம் உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் நடைபெற்ற பல்வேறு அமைப்புகள் மற்றும் துறைசார் மக்களுடனான கலந்துரையாடலின் போதே, டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “கடந்த காலங்களில் ரணில் எவ்வாறான நிலைப்பாட்டில் இருந்தார் என்பது முக்கியமல்ல.
எதிர்வரும் அதிபர் தேர்தலில் தற்போது நாட்டின் அதிபராக உள்ள ரணில் விக்ரமசிங்க போட்டியிட உள்ளார். இந்நிலையில், அவரே மீண்டும் அதிபராக வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. அதற்கு பல காரணங்கள் உண்டு.
இதேநேரம், அரசியல் ரீதியில் ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்கான தீர்வினை முன்வைக்க மாட்டார். அவரை எவ்வாறு நம்புவது என சிலர் சிந்திக்கின்றனர். அதனால் தான் நான் கூறுகின்றேன் ரணிலை நம்பாவிட்டால் என்னை நம்புங்கள் நான் செய்விப்பேன் என்று.
மக்களின் பிரச்சினை
இந்நேரம் மக்களின் பிரச்சினைகளை தீரா பிரச்சினையாக கொண்டு செல்லும் அரசியல்வாதியாக நான் ஒருபோதும் இருக்கப் போவதில்லை. இருந்ததும் கிடையாது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.
இதேவேளை, பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக அழிக்கலாம் என பலர் நம்பியிருக்கவில்லை. ஆனால் நான் நம்பியிருந்தேன். அது நடந்து நாடும் அமைதி நிலைக்கு வந்துவிட்டது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு
அது போன்று தான் 13 ஆவது அரசியலமைப்பு தீர்வுக்கான ஆரம்ப புள்ளியெனவும், அதை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்திருந்தேன். அதை அன்று பலர் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் இன்று அது கிடைத்தாலே போதும் என்று அவர்களே முணுமுணுக்க தொடங்கியுள்ளனர்.
ஆகவே தான், நான் மக்களுக்கு ஒன்றை கூறுகிறேன். எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்குகளால் தமிழ் மக்களின் பலத்தை காட்டுங்கள் மக்களுக்கான தீர்வினை நான் பெற்றுத் தருவேன்” என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |