நவீனமயப்படுத்தப்படவுள்ள இலங்கையின் கல்வித்துறை..!
அடுத்த பத்து வருடங்களில் கல்வித்துறையை நவீன மயப்படுத்தி தன்னிறைவான திறன்களை கொண்ட மாணவச் சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
திறன் மற்றும் தொழில் கண்காட்சியான ´skills Expo 2023´ நிகழ்வில் நேற்று (12) கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“கல்வித்துறையை நவீன மயப்படுத்துவதற்கான அமைச்சரவை குழுவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் விரைவில் முன்னெடுக்கப்படும்.
வாழ்க்கைக்கு திறன் – திறனுக்கு தொழில்
கடந்த பத்து வருடங்களில் சில அரச நிறுவனங்களுக்காக செலவிட்ட பணத்தை கல்விக்காக செலவிட்டிருந்தால் ஆசியாவின் மிகச் சிறந்த கல்வித்துறை இலங்கை வசமாகியிருக்கும்.
´வாழ்க்கைக்கு திறன் – திறனுக்கு தொழில்´ என்ற தொனிப்பொருளின் கீழ் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுவரும் மேற்படி கண்காட்சி இம் மாதம் 12,13 மற்றும் 14 ஆம் திகதிகளில் காலை 9 மணிமுதல் இரவு 8 மணிவரையில் நடைபெறவுள்ளது.
இக் கண்காட்சியை அனைவரும் இலவசமாக பார்வையிடலாம். Sri Lanka Skills Expo 2023 கண்காட்சியின் ஊடாக நாட்டின் பல்வேறு துறைகளுக்கும் கொள்கை தயாரிப்பாளர்களுக்கும் கருத்துகளை பரிமாறிக்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்பதோடு, துறைசார் திறன் விருத்தியின் ஊடாக நாட்டின் அபிவிருத்திக்கும் வலுவானதொரு பங்களிப்பினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.” என தெரிவித்தார்.
இதன் போது தொழில்நுட்ப விவசாய வேலைத்திட்டத்திற்கான இணையத் தளத்தை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றதோடு, தொழில்நுட்ப விவசாயக் செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையிலான் ட்ரோன் பாவனையை ஊக்குவிக்கும் விதமாக ட்ரோன் தொழில்நுட்பவியலாளர்கள் மூவருக்கு சின்னங்கள் அணிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
