முன்னணி களமுனைக்கு திடீரென சென்ற உக்ரைன் அதிபர்
ரஷ்ய படைகளுடன் உக்கிர போர் நடைபெறும் உக்ரைனின் கிழக்கு நகரமான Bakhmut-ற்கு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி திடீர் விஜயம் செய்தது படையினர் மத்தியில் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த நாள் முதல், மிகவும் தீவிரமான சில போர்கள் நடந்த இடமாக Bakhmut மாறியது. தலைநகர் கீவ்விற்கு சுமார் 600 கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள Bakhmut நகரமானது தற்போது வரை உக்ரைனின் வசம் உள்ளது. இந்த நிலையில், அதிபர் ஜெலென்ஸ்கி திடீரென Bakhmut நகருக்கு வருகை புரிந்தார்.
ஒருபோதும் விட்டு கொடுக்க மாட்டோம்
அங்குள்ள மங்கலான கட்டடம் ஒன்றில் இராணுவ வீரர்களை சந்தித்த அவர், பயன்படுத்தப்படாத தொழிற்சாலையாக இருக்கும் அந்த கட்டடத்தை ''முழு முன் வரிசையில் வெப்பமான இடம்'' என்று அழைத்தார். பின்னர் பேசிய ஜெலென்ஸ்கி, 'Bakhmut கோட்டையும், எங்கள் மக்களும் எதிரியால் வெல்லப்படாதவை. தைரியம் வாய்ந்த எங்கள் மக்களுக்குள் சகிப்புத்தன்மை உண்டு, ஆனால் எங்களுடையதை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதை துணிச்சலாக நிரூபித்தார்கள்.
மே மாதத்தில் இருந்து ஆக்கிரமிப்பாளர்கள் எங்கள் Bakhmut-ஐ சிதைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்கள் நேரம் தான் வீணானது. Bakhmut ஏற்கனவே ரஷ்ய இராணுவத்தை மட்டுமல்ல, ரஷ்யாவின் கூலிப்படையையும் தோற்கடித்தது' என தெரிவித்தார்.
பெருமைப்படும் உக்ரைன்
மேலும் இராணுவ வீரர்களை பாராட்டிய அவர், 'உக்ரைன் உங்களை நினைத்து பெருமைப்படுகிறது. நானும் உங்களைக் கண்டு பெருமைப்படுகிறேன்! உங்கள் துணிச்சல், வலிமை மற்றும் எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்கும் திறனுக்கு எனது நன்றி' என்று புகழ்ந்தார்.
பாதுகாக்கப்படும் சுதந்திரம்
அத்துடன் கடுமையான போர்களிலும், பல உயிர்களை பலி கொடுத்தாலும் நம் அனைவரின் சுதந்திரமும் இங்கு பாதுகாக்கப்படுகிறது என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார். Bakhmut நகருக்கு ஜெலென்ஸ்கி எப்படி வந்தார் என்பது தெளிவாக தெரியவில்லை.
ஆனால், அவரது இந்த அறிவிக்கப்படாத பயணம் நகரைச் சுற்றி வளைக்க முயற்சிக்கும் ரஷ்யாவை ஏமாற்றும் வகையில் அமைந்ததாக கூறப்படுகிறது.