வேடிக்கை பார்க்கும் அரசாங்கம்! அரச தலைவர் மற்றும் பிரதமரின் மாளிகையை முற்றுகையிட ஹிருணிகா அழைப்பு
அரச தலைவர் மற்றும் பிரதமரின் மாளிகை, வீடுகளை மக்கள் முற்றுகையிட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர (Hirunika Premachandra) தெரிவித்துள்ளார்.
கொழும்பு - மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
ராஜபக்ச ஆட்சியின் ஊழல் காரணமாக நாட்டில் டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் எரிபொருள் இல்லை. மின்சாரம் இல்லை. அரசாங்கம் தீர்வை வழங்காமல் வேடிக்கை பார்கிறது. மக்கள் மின், நீர் கட்டணம் செலுத்துவது தொடர்ந்து சேவையை பெறுவதற்காவே.
ஆனால் மக்களின் பணத்தை பெற்றபின் மின் துண்டிப்பது நியாயமா? வெளிநாடுகளில் இப்பிரச்சினை ஏற்பட்டிருந்தால் அந்நாட்டு மக்களில் அணுகுமுறை வேறுவிதமாக இருந்திருக்கும்.
எனவே நாட்டு மக்கள் ஒன்றிணைந்து அரச தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரின் மாளிகை, வீடுகளை மக்கள் முற்றுகையிட வேண்டும்.
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல 2015 முதல் மின் கட்டணம் செலுத்தவில்லையாம். ஒருகோடி ரூபாவாக மின் கட்டணம் வந்துள்ளது. சாதாரண மக்கள் கட்டவில்யென்றால் என்ன நிலைமை ஏற்பட்டிருக்கும்.
இப்படிப்பட்ட அமைச்சர்களே நாட்டை நிர்வகிக்கின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
