ரணிலின் இந்திய பயணம் - தழிழரசு கட்சியுடன் அவசர சந்திப்பு
அதிபர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை இந்தியாவிற்கு மேற்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில், நாளை மறுதினம்(18) இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளனர்.
இச்சந்திப்பில் அர்த்தமுள்ள அதிகார பகிர்வை வழங்குமாறும், குருந்தூர்மலை விவகாரம் மற்றும் நில ஆக்கிரமிப்பு தொடர்பாகவும் அதிபரிடம் கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளனர்.
13ஆவது திருத்த சட்டம்
தமிழர் விவகாரத்தில் அதிபரிடம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி எவ்விடயங்களை வலியுறுத்தவேண்டும் என்பது குறித்து தமிழ்த்தேசிய கட்சிகள் கடிதங்களை அனுப்பிவைத்திருப்பதுடன், இந்திய உயர்ஸ்தானிகரிடம் தமது நிலைப்பாடுகளை நேரடியாகவும் அறிவித்துள்ளன.
மேலும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி அதிபரிடம் சமஷ்டி முறையிலான தீர்வையே இந்தியா வலியுறுத்தவேண்டுமெனவும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தவேண்டுமெனவும் தனித்தனியாக இந்திய உயர்ஸ்தானிகரிடம் கடிதங்களைக் கையளித்துள்ளன.
இச்சந்திப்பு நாடாளுமன்றத்தில் நாளை மறுதினம் பி.ப 3 மணிக்கு நடைபெறவிருப்பதோடு, அதிபரே அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.