மன்னிப்புக் கோரமாட்டேன்! சிறையிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்ட ரஞ்சன் தடாலடிப் பதில்
மன்னிப்பு கோர மாட்டேன் என நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake) தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் ஆணைக்குழுவில் இன்று சாட்சியமளிக்க அழைத்து வரப்பட்டிருந்த அவர், சாட்சியமளித்து விட்டு வெளியேறும் போது ஊடகவியலாளர்களை பார்த்து இதனை கூறியுள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் பொது மன்னிப்பு கிடைக்குமா, நீங்கள் அதனை எதிர்பார்க்கின்றீர்களா என ஊடகவியலாளர்கள் சிறைச்சாலை பேருந்தில் இருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவிடம் வினவினர்.
“அதற்கு தெரியவில்லை என தலையை அசைத்தும் கைகளை விரித்தும் பதிலளித்ததுடன் மன்னிப்பு கோர மாட்டேன்” எனக் கூறினார்.
முன்னதாக பேருந்தில் ஏறும் போது நலமாக இருக்கின்றீர்களாக என ஊடகவியலாளர் ரஞ்சனிடம் கேட்டனர். “நலமாக இருக்கின்றேன், நீங்கள் நலமா எனக் கேட்டார். அத்துடன் தன்னால் பேச முடியாது , பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” எனவும் கூறினார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கரை ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க, அங்குகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வெலிகடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
