சட்டத்தரணிகள் சங்கத்தின் கோரிக்கைக்கு பதிலளித்த ஜனாதிபதி செயலகம்!
கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதியுடன் நடைபெற்ற கூட்டத்தின் முழுமையான காணொளி பதிவுகளை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த கோரிக்கைக்குப் ஜனாதிபதி செயலகம் பதிலளித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன பெரேராவின் கையொப்பத்துடன் பதில் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரால் செய்யப்பட்ட உத்தியோகபூர்வ உரைகளின் தொகுக்கப்படாத காணொளி பதிவுகள் ஓகஸ்ட் 12ஆம் திகதியன்றே அச்சங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
கூட்டத்தில் கலந்துகொண்ட ஏனைய தரப்பினரின் கருத்துரைகள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் அடங்கிய பதிவுகள், உரிய உத்தியோகபூர்வ நடைமுறைகளுக்கு அமைவாக எதிர்காலத்தில் கூடிய விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த காணொளி காட்சிகளை முறைப்படியும் சரியான முறையிலும் வழங்குவதற்கு ஜனாதிபதி செயலகத்தின் முழுமையான ஒத்துழைப்பு எப்போதும் கிடைக்கும் என்றும் அக்கடிதத்தில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ஓகஸ்ட் 12ஆம் திகதி ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் தொகுக்கப்படாத முழுமையான காணொளி பதிவை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம் முன்னர் கோரிக்கை விடுத்திருந்தது.
ஜனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை
குறித்த கலந்துரையாடலின் காணொளி பதிவின் ஒரு பகுதி மட்டுமே தற்போது தமக்குக் கிடைத்துள்ளதாகவும் சில பகுதிகளில் ஒலி தெளிவில்லாமல் இருப்பதாகவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதன்படி, கலந்துரையாடல் முழுவதும் இடம்பெற்ற அனைத்து உரையாடல்கள், அவதானிப்புகள் மற்றும் பதில்கள் உட்படச் சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகளின் இறுதி கருத்துகளும் அடங்கிய முழுமையான, தொகுக்கப்படாத காணொளி பதிவை வழங்குமாறு அச்சங்கம் கோரிய நிலையில் இந்த பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |