முறையற்ற மீன்பிடியை நிறுத்தக் கோரி : திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்
தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைமையினை இடை நிறுத்தக்கோரி திருகோணமலை மாவட்ட கடற்தொழிலாளர்களால் இன்றையதினம் (13) பாரிய அளவிலான ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை சிறிமாபுர பகுதியில் இருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் வடகரை வீதி, தபால் நிலைய வீதி, உற்துறைமுக வீதியூடாக மாவட்ட கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகம் வரை சென்றது.
பெருந்திரளான கடற்றொழிலார்கள் இதில் பங்கேற்று தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
கடல் வளம்
தடைசெய்யப்பட்ட வலைகளை உபயோகித்து மீன்பிடியில் ஈடுபடுதல், சட்டவிரோத முறைமைகளான டைனமோட் போன்றவற்றின் மூலமாக மீன்பிடியில் ஈடுபடுதல்.
இவற்றின் மூலமாக கடல் வளம் முற்றாக பாதிக்கப்பட்டு கடலில் மீன் வளம் குறைவடைந்து செல்வதனால் உரிய முறையில் மீன்பிடித்தொழிலை மேற்கொள்ள முடியாத நிலைக்கு ஆளாகியிருப்பதாகவும் இதன்போது மீனவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
அரச அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் தெரிந்திருந்தும் எதுவித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.