பண்டிகை காலத்தில் மேலும் அதிகரிக்கவுள்ள மரக்கறிகளின் விலை
இரசாயன உரம் மற்றும் களைநாசினிகள் என்பன இல்லாதமை காரணமாக மரக்கறி செய்கைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் எனவே தற்போது சந்தையில் நிலவும் மரக்கறிகளுக்கான தட்டுப்பாடு, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் என அகில இலங்கை விசேட பொருளாதார மைய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தறபோது சந்தைக்குக் கிடைக்கும் மரக்கறிகளின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளமையால், மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்து செல்வதாக அந்த ஒன்றியத்தின் முகாமைத்துவ பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
இதன்படி நுவரெலியா பொருளாதார மையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் அளவு 60 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்புத்தேகம பொருளாதார மையத்திற்கு இன்று 20 சதவீதமான மரக்கறிகளே கிடைத்துள்ளன. தம்புள்ளை பொருளாதார மையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் அளவு, 15 வீதமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், மெனிங் சந்தைக்கு 25 சதவீத மரக்கறிகளே கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் அறுவடைகள், பொருளாதார மையங்களுக்கு கிடைக்காமையினால், பண்டிகைக் காலத்தில், மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை விசேட பொருளாதார மைய ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.