இறக்குமதி உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் : எச்சரிக்கும் அமைச்சர்
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சில உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
எல் நினோ காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இந்த நிலைமை ஏற்படும் என்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
எனினும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் தடங்கல் ஏற்படாத வகையில், மாற்றுச் சந்தைகளை ஆராய்ந்து பொருட்களைத் தொடர்ச்சியாக விநியோகிக்க இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் பரபரப்பு : வெளிநாட்டில் மனைவிக்கு சித்திரவதை : குழந்தைகளுடன் வாவியில் குதிக்க முயன்ற தந்தை
இறக்குமதி செய்யப்படும் செத்தல் மிளகாய்
பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில், இறக்குமதியாளர்களுடன் வர்த்தக அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், செத்தல் மிளகாய் தவிர்ந்த ஏனைய அனைத்து இறக்குமதிப் பொருட்களையும் உள்ளூர் சந்தைக்கு தடையின்றி விநியோகிக்க முடியும் என இறக்குமதியாளர்கள் அரசாங்கத்துக்கு உறுதியளித்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில செத்தல் மிளகாய் தொகுதிகளில் அதிக ஈரப்பதம் காணப்படுவதே தற்போதைய சிக்கலுக்குக் காரணமாகும்.
இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLSI) விதிமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் தேவைகளுக்கு அமைய, இறக்குமதி செய்யப்படும் செத்தல் மிளகாயின் ஈரப்பதம் 12 வீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
எனினும், இந்தியாவில் பெய்து வரும் கனமழை மற்றும் எல் நினோவுடன் தொடர்புடைய காலநிலை மாற்றங்கள் காரணமாக, சில இறக்குமதித் தொகுதிகளில் ஈரப்பதம் 13 முதல் 14 வீதம் வரை பதிவாகியுள்ளதால் அவற்றை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை
இதனால் சந்தையில் செத்தல் மிளகாய்க்கான உண்மையான தட்டுப்பாடு ஏற்படவில்லை, தரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியதன் காரணமாகவே இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்தும் சீரற்ற காலநிலை நீடித்தால் எதிர்கால இறக்குமதித் தொகுதிகளும் பாதிக்கப்படலாம் என்பதால், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைமுறையில் இருக்கும் இடைக்காலப் பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பில் இறக்குமதியாளர்கள் கலந்துரையாடல் கோரியுள்ளனர்.
இதேவேளை, விநியோகப் பிரச்சினைகளைப் பயன்படுத்தி வர்த்தகர்கள் நியாயமற்ற வகையில் பொருட்களின் விலைகளை அதிகரிக்க முயன்றால் அரசாங்கம் தலையிடும். சந்தை விநியோகம் மற்றும் கேள்விக்கு ஏற்ப விலைகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.
நுகர்வோரைப் பாதிக்கும் வகையில் விலைகள் அதிகரிக்கப்பட்டால் நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் நுகர்வோர் சேவைகள் சபை ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் தேவைப்பட்டால் கட்டுப்பாட்டு விலைகள் விதிக்கப்படும்“ என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |