பிரதமர் மகிந்தவின் பெருந்தொகை பணம் மோசடி - சிறப்பு விசாரணைகள் முன்னெடுப்பு
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வங்கி கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாவை மோசடி செய்த பிரதமருக்கு நெருக்கமான அதிகாரி பதவி நீக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் குறித்த வங்கிக் கணக்கின் தானியக்க பணப் பறிமாற்று அட்டையை பயன்படுத்தியே இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ள பணத்தின் பெரும் பகுதி பிரதமர் மகிந்த ராஜபக்ச அரச தலைவராக பதவி வகித்த காலத்தில் அவருக்கு சம்பளமாக கிடைக்கப் பெற்ற பணத் தொகை என ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
குறித்த வங்கிக் கணக்கில் பணம் குறைந்துள்ளமை தொடர்பில் தேடிப் பார்த்த போதே இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர், முன்னாள் சபாநாயகர் ஒருவரின் மகனான மகிந்த ராஜபக்சவுக்கு மிக நெருக்கமான, சில காலம் அவரது தனிப்பட்ட உதவியாளராக செயற்பட்டவர் என பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பண மோசடி தொடர்பிலான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து, குறித்த நபர் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் பிரதமர் அலுவலகம் தொடர்பில் வகித்து வந்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
