சிறைச்சாலைக்குள் வீசியெறியப்பட்ட மர்மபொதி! ஒருவர் கைது
மாத்தறை சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களை வீசியெறிந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் பொதி ஒன்றை மாத்தறை சிறைச்சாலைக்குள் வீசியெறிந்து விட்டு தப்பிச் செல்வதை அப்பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த அரச புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் அவதானித்துள்ளனர்.
அதனையடுத்து குறித்த நபர்களை கைது செய்வதற்காக விரட்டிச் சென்ற போது ஒருவர் தப்பிச் சென்றுள்ளதுடன் இன்னொருவர் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரிசோதனை
அதனையடுத்து சிறைக்குள் வீசியெறியப்பட்டிருந்த பொதியைக் கைப்பற்றி பரிசோதித்த போது அதற்குள் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருள், மொபைல் போன் மற்றும் அதற்கான பற்றரிகள், சிம் அட்டை, லைட்டர், சிகரெட்டுகள் என்பன பொதி செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மாத்தறை தலைமையக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் மாத்தறை சிறைச்சாலை நிர்வாகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |