இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது "யாழ்ப்பாண சிறைச்சாலை நூலகம்"
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
ஐ.பி.சி தமிழ், யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலக்சுமி அருளானந்தம் சிவநேசன் குடும்பம், மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தினர் இந்தச் சிறைச்சாலை நூலகத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த நூலகம் இன்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜாவால் இந்த நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
சிறைச்சாலை நூலகம்
யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலக்சுமி அருளானந்தம் சிவநேசன் குடும்பத்தினரால் சம்பிரதாய பூர்வமாக நூல்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ.உதயகுமார, பிரதான ஜெயிலர் எச்.எம்.டி.ஹேரத்,யாழ்ப்பாண பிரதேச செயலாளர் சா.சுதர்சன் மற்றும் சிறை அதிகாரிகள், சிறைக்கைதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நூலகம் தொடர்ச்சியாக இயங்குவதற்கான முழுமையான பங்களிப்பையும், பராமரிப்பு, ஆலோசனைகளையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் வழங்கவுள்ளது.
யாழ் பல்கலை
யாழ்ப்பாணப் பல்கலைகழகம் தனது கற்றல் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி செயற்பாடுகளுக்கு அப்பால் தான் சார்ந்த சமூகத்தின் மேம்பாட்டுக்காகச் சமூகப் பொறுப்பாண்மை மற்றும் சமூக வலுவூட்டல் செயற்பாடுகளில் அண்மைக் காலமாக ஈடுபட்டு வருகின்றது.
பல்கலைக் கழகத்தின் பால் நிலை சமத்துவம் மற்றும் ஒப்புரவுக்கான நிலையம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இசை செயற்றிட்டங்களினால் நூற்றுக் கணக்கான குடும்பங்களின் ஜீவனோபாயத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.
நூலகத் திறப்பு
அதேபோலவே, பல்கலைக் கழகத்தின் சமூகப் பொறுப்பாண்மையின் ஒரு அம்சமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் தனது சமூக வலுவூட்டல் செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நூலக நியமங்களுக்கு ஏற்றவாறான நூலகமொன்றை ஒழுங்கமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அம்முயற்சியின் முதல்படியாக ஏறத்தாழ 2500 புத்தகங்களை கொண்ட இந்த நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
