நுவரெலியாவில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப் புறக்கணிப்பு!
டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை உரிய முறையில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நுவரெலியா பிரதேச தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய தினம் குறித்த புறக்கணிப்பு இடம் பெற்றுள்ளது. இதனால் தூரப் பிரதேசங்களுக்குச் செல்லும் பயணிகள் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.
“அப்பி பாரே, கோட்டா கெதரே” என கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நுவரெலியா நகரிலுள்ள எரிபொருள் நிலையங்களில் உரிய முறையில் தமக்கு எரிபொருள் வழங்கப்படுவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆகவே தமக்கு எரிபொருள் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி வழங்கப்பட வேண்டும் என பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சாரதிகளும், நடத்துனர்களும் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா சாந்திபுர, மிபிலியான, ஹாவா எலிய, பொரலாந்த, ராகல, நானுஓயா மற்றும் பட்டிப்பொல ஆகிய இடங்களுக்கான போக்குவரத்தில் ஈடுபடுவதை தவிர்த்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாட தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக நுவரெலிய தலைமையக காவல் நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் பிரேமலால் தெரிவித்துள்ளார்.







